“அப்துல்கலாம் ஐயா” (நினைவுக்கவி)
இராமேஸ்வரத்தின் இமயம்
அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா
தாய்மொழி தமிழில் கல்வி கற்று
அறிவியல் துறையில் சாதனை பெற்று
அக்கினிச் சிறகை விரித்து
அண்டத்தை ஆய்ந்து
ஆடித்திங்கள் 27இல் இவ்வுலகைவிட்டு ஏகினாரே !
காலம் தந்த மகான்
மண்ணையும் விண்ணையும்
அளந்த அறிஞன்
இளைஞர்களின் கனவு நாயகன்
அறிவியலையும் திருக்குறளையும்
தன்னிரு கண்ணெனக் கொண்டு
இறுதி மூச்சு வரை
இலட்சியத்தோடு வாழ்ந்த மகான் !
அணுஆயுத சோதனையால்
அகிலத்தையே வியக்க வைத்து
குழந்தைகளுக்கு அன்பைக் கொடுத்து
மாணவர்களைக் கனவு காண வைத்து
கனவை மெய்ப்பித்த கனவு நாயகன்
மக்களை நேசித்தாரே மானசீகமாய் !
ஏவுகணையின் நாயகன்
திட்டங்களைத் தீட்டிய தீரன்
மனிதத்தை நேசித்த மானிடன்
மானிடம் பேணிய புனிதன்
மதம் இனம் கடந்த மனிதன்
விருதுகள் பலவென்ற அறிஞன்
வள்ளுவன் காட்டிய வழியில்
வாழ்ந்தும் காட்டினாரே !
தமிழருக்கு பெருமை தந்து
தலை நிமிர்ந்து வாழ வைத்த
கனவு நாயகன் கலாம் ஐயா
கனவு காண வைத்தார்
கனவினை மெய்ப்பித்தார்
கனவாகிப் போனாரே ஆடித்திங்கள் 27இலே
மக்கள் உள்ளங்களில்
மங்காமல் வாழ்வார் என்றும்
கலாம் ஐயாவிற்கு ஒரு சலாம் !
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 27.07.2021