அபுதாபியில் முதல் இந்து கோவில் – இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா
ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது. பின்னர், அபுதாபி-துபாய் நெடுஞ்சாலை அருகே புதிய இந்து கோவிலை கட்ட 14 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் 7 கோபுரங்களை கொண்ட மிகப்பெரிய கோவிலை கட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு முன்வந்தது. உலகம் முழுவதும் சுமார் 1200 கோவில்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆன்மிக வழிப்பாட்டு மன்றங்களை இந்த அமைப்பு நிறுவி, பராமரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. சுமார் 4 மணிநேரம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பின் தலைமை பூசாரி மஹந்த் ஸ்வாமி மஹாராஜ் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் பங்கேற்ற ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சுரி, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து கடிதத்தை வாசித்தார்.
‘அபுதாபியின் பட்டத்து இளவரசர் எனது அருமை நண்பர் ஷேக் மொஹம்மத் பின் ஸயெத் அல் நஹ்யான் அவர்களுக்கு 130 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அடிக்கல் நாட்டப்படும் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமான கலாசார தொடர்புகளையும், உலகளாவிய மனித மாண்புகளையும் பிரதிபலிக்கும் ஆன்மிக அடையாளச் சின்னமாக விளங்கும்.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வாழும் சுமார் 33 லட்சம் இந்தியர்களுக்கும் இதர கலாசாரங்களை பின்பற்றி வாழும் மக்களுக்கும் இந்த கோவில் ஒரு ஊக்கசக்தியாக திகழும் என நம்புகிறேன்’ என தனது வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.