அன்னைக்கு ஓர் கவி …..!!!

தைத் திங்கள் பத்து
எம் மனங்களைத் தைத்த நாள்
உயிர் தந்த எம் அன்னையை
காலன் கவர்ந்து சென்றநாள்
கண்ணீரில் நாம் கரைந்த நாள்
கனவாய் போகாதா என எண்ணிய நாள்
ஆண்டுகள் ஏழும் கடந்ததம்மா
ஆறாத் துயரமும் தொடருதம்மா !

அன்னையே உன் அன்பிற்கு முன்னால்
அவனியில் ஈடுஇணை
எதுவும் இல்லையம்மா
விதியின் வசத்தால்
வாழும் வயதினில்
வாழ்வை இழந்த போதும்
உனக்காக வாழாமல்
எமக்காகவே வாழ்ந்த ஜீவன் நீயல்லவா !

அன்னையே உனைப் போற்ற
அகராதியிலும் வார்த்தை இல்லையம்மா
அதற்கும் அப்பாற்பட்டவள் நீ
நீயே ஒரு கவிதையம்மா
கவிதைக்கே கவிதையா ?

இருக்கும் போது
தெரியவில்லை அம்மா
உன் அருமை
இல்லாத போது
வலிக்கிறதே இதயம்
தாயாகிய பின்னரே – நானும்
உணர்ந்தேன் தாய்மையின் சக்தியினை !

வரிகளில் எழுதிட முடியவில்லை
வலிகளைத் தாங்கவும் சக்தியில்லை
எந்தத் தாய்க்குமே
வரக் கூடாதது மரணமே
எத்தனை ஜென்மம் எடுத்தாலுமே
அடைக்க முடியாதது உன் கடனம்மா
மறுஜென்மம் என ஒன்றிருந்தால்
மீண்டும் வந்திடம்மா என் தாயாகவே !

கவியாக்கம் …ரஜனி அன்ரன் (B.A)


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !