அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை
இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன இராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி, “எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய இராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடுதான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.
இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது” என மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...