அதிமுக தலைமையில் மெகா கூட்டணி – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

நாளை திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் இருவரும் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு மாலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி 6.15 மணிவரை நடந்தது.

இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.திமு.க. தலைமையில் தான் பலமான மெகா கூட்டணி அமையும். இந்தக் கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருக்கும். தேர்தல் வெற்றிக்கு நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் இன்னும் பூத் கமிட்டி அமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து அதுபற்றிய தகவல்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். இப்போதே தேர்தல் பணியை தொடங்குங்கள். ஜெயலலிதா இருந்த போது வெற்றி பெற்றது போல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது அணி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

ஜெயலலிதா பிறந்த நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடவும், ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி பேசப்படவில்லை.

பின்னர் இது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலையொட்டி கட்சிப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாற்பதும் நமதே என்பது ஜெயலலிதாவின் முழக்கம். இலக்கு, அந்த இலக்கை அடையவும், பூத் கமிட்டி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து பேசவில்லை. எந்தக் கட்சி வந்தாலும் அ.திமு.க. தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும்.

தற்போதுவரை எந்த கூட்டணியும் அமையவில்லை. அமைந்தால் அது மெகா கூட்டணியாக இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படும் கூட்டணி குறித்து யாரிடமும் கருத்து கேட்கப்படவில்லை. மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !