அதிமுகவில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாந்தனர்- அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை சாந்தோமில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தேவையற்ற சர்ச்சையாகும். இதனால் அ.தி.மு.க.வில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 2 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கலந்து கொள்ள இயலவில்லை என்பதை தலைமைக்கு முறையாக தகவல் கொடுத்தனர்.
கவர்னரை, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதில் வேறு ஒன்றும் சிறப்பு இல்லை. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 3 எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு அனுப்பவில்லை. அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதால் அழைப்பு கொடுப்பது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.