அதிக ஓசை எழுப்பும் ஒலி எழுப்பிகளுடனான வாகனங்கள் சுற்றிவளைப்பு
அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகள் (Horn) மற்றும் பலநிறங்களில் மின்குமிழ்களை பொருத்தியுள்ள வாகனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என, போக்குவரத்துப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான ஹோர்ன்கள் மற்றும் மின்குழில்களை பொருத்தியுள்ள வாகனங்களுக்கு அவற்றை அகற்றுவதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இவ்வாறான வாகனங்களின் ஊடாக ஏற்படும் விபத்துக்களின்போது 25,000 முதல் 30,000 ரூபா வரை அபராதம் அறவிடவும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அவ்வாறான விபத்துக்களின்போது உயிரிழப்புகள் ஏற்படுமாயின் 75,000 ரூபா வரை தண்டப்பணம் அறவிடவும் ஒரு வருட கால சிறைத்தண்டனை விதிக்கவும் முடியும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறான விபத்துக்களுக்கு வாகன சாரதி மற்றும் வாகன உரிமையாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வாகனங்களின் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தக்கூடிய சமிஞ்சை மின்விளக்குகளுக்கு மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்களை அகற்றுமாறும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் அறிவித்துள்ளார்.