அதிக உடல் பருமன் கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது: ஆய்வில் தகவல்!
உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது கடுமையான நோய் அல்லது கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தின் பொது சுகாதார துறை, அதிக எடை மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கோ அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கோ அதிக ஆபத்தில் இருப்பதைக் கண்டறிந்தது.
உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்புக்கு முன்னதாக இந்த ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்தின் பொது சுகாதார துறையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அலிசன் டெட்ஸ்டோன் கூறுகையில், “தற்போதைய சான்றுகள் தெளிவாக உள்ளன. அதிக எடை அல்லது பருமனாக இருப்பது கடுமையான நோய் அல்லது கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதே போல் பல உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
உடல் எடையை குறைப்பது ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளைத் தரும். மேலும் கொவிட்-19 இன் உடல்நல அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் இது உதவும்” என கூறினார்.
ஐரோப்பாவில் அதிக உடல் பருமனை இங்கிலாந்து கொண்டுள்ளது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரியவர்கள் அதிக எடை அல்லது பருமனானவர்கள். வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இதே போன்ற புள்ளிவிபரங்கள் உள்ளன.