அதிகார பகிர்வு நிச்சயம்- கிளிநொச்சியில் ரணில் உறுதி

புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் வெள்ளை வான் கலாசாரம் தற்போது கிடையாது.
ஆனால் மக்களை தேடி அவசர அம்பியூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லைா என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 2015க்குப் பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா?
நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது.
இதனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவரவேண்டுமானால் மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று எதிர்வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது நாடாளுமன்றத்தில் 120 க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது” என குறிப்பிட்டார்.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பகிரவும்...