அதிகாரம் ரத்து- தீர்ப்பினை எதிர்த்து கிரண்பேடி மேல் முறையீடு செய்ய திட்டம்
புதுவை கவர்னர் கிரண்பேடி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது.
கவர்னர் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார் என முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.
யூனியன் பிரதேசமான புதுவையின் நிர்வாகியான தனக்கே முழு அதிகாரம் உள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து கூறி வந்தார். இதனால் இந்த மோதலுக்கு முடிவே ஏற்படவில்லை.
இந்த நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சி முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் யூனியன் பிரதேச கவர்னர்களின் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் இனி இடையூறு அளிக்க கூடாது என்று கூறினார்.
இதனை கவர்னர் கிரண்பேடி ஏற்றுக்கொள்ளவில்லை. யூனியன் பிரதேசங்களில் புதுவைக்கும், டெல்லிக்கும் தனித்தனி விதிகள் உள்ளது என்றும் புதுவையை பொறுத்தவரை கவர்னருக்கே அதிகாரம் என்றார்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் புதுவையில் கவர்னருக்கே கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறியது. அதோடு கவர்னருக்குரிய அதிகாரத்தை வரையறுத்து ஒரு உத்தரவையும் வெளியிட்டது.
இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்தது.
தீர்பபை முதல்-அமைச்சர் நாராயணசாமி வரவேற்றதோடு, கவர்னர் கிரண்பேடி இனிமேலும் தீர்ப்பை ஏற்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு செய்யாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்தார். அதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கம் போல் கவர்னர் மாளிகைக்கு வரும் கோப்புகள் ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், புதுவை நன்றாக இருக்க நான் வாழ்த்துகிறேன் என்றும் பதிவு செய்தார்.
மேலும், யூனியன் பிரதேசத்தில் நேர்மையுடனும், பொறுப்புடனும் நிதி மேலாண்மையை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் புதுவை மக்கள் அனைவரும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கவர்னர் நேரடியாக மேல்முறையீடு செய்ய முடியாது என்றும், அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளதால் மத்திய உள்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். இதனால் மத்திய உள்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.