அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியை சுதந்திர கட்சி ஏன் கோர வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி யமைக்கும் பட்சத்தில் பதவிகளைப் பிரித்துக்கொள்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத் தொன்றைத் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில் இத்தகைய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா?என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பினார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதி பதவியினால் எதையும் செய்துகொள்ள முடியாது என்றும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறெனின் அத்தகையதொரு பதவியை மீண்டும் ஏன் கேட்க வேண்டும் என்றும் பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
நெலும் மாவத்தையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது :எப்போதுமில்லாத வகையில் நாட்டின் அனைத்துத்துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆளுநர்கள் என்போர் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாவர். ஜனாதிபதியின் அதிகாரங்களை அந்தந்த மாகாணங்களில் செயற்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநரிடம் காணப்படும். கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் முறையாக வரி செலுத்தவில்லை எனின், அவரிடமிருந்து வரியை அறவிடுவதே தற்போது செய்ய வேண்டிய காரியம் என்று மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி கூறுகின்றார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அஸாத்சாலி வருகிறார் என்றால் மக்கள் பிரதிநிதிகள் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். முதற்தடவையாக ஆளுநர் செல்லும் இடங்களில் எதிர்ப்பு ஒலிகள் கேட்கின்றன. ஆளுநரின் உத்தரவுகள் செயற்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஆளுநர் ஹிஸ்புல்லாவின் நிலையும் இதுதான். ஹிஸ்புல்லாவிற்கும், தீவிரவாதிகளுக்குமான தொடர்புகள் குறித்து சி.சி.ரி.வி. கமரா மூலம் தற்போது பல்வேறு ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை ஜனாதிபதி உடனடியாக நிறுத்திவைத்திருக்கின்றார். இதிலிருந்து தற்போது ஆளுநர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நம்பிக்கையில்லை என்பதே புலனாகின்றது.
அவ்வாறிருக்கையில் மக்கள் எவ்வாறு ஆளுநர்களை நம்புவார்கள்?
அரசியலமைப்பின்படி 36 அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது வரையில் 8 மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. எனவே அந்த 8 மாகாணசபைகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் ஆளுநர் வசமே காணப்படுகின்றது. ஆளுநருக்கும், மக்களுக்கும் இடையில் முரண்பாடொன்று ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் மாகாணசபைகளின் செயற்பாடுகள் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
பதவிகளைப் பிரித்துக்கொள்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்தொன்றைத் தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில் இத்தகைய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா? 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதி பதவியினால் எதையும் செய்துகொள்ள முடியாது. அவ்வாறெனின் அத்தகையதொரு பதவியை மீண்டும் ஏன் கேட்க வேண்டும்?
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை இம்மாதம் 18 ஆம் திகதி வரை பிற்போட்டிருக்கிறது. இதுவிடயத்தில் இறுதித் தருணத்திலேயே தீர்மானம் மேற்கொள்வோம் என்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். இராணுவத் தளபதியைத் மூன்று தடவைகள் தொடர்புகொண்டு தனக்கு நெருங்கியவர்கள் குறித்து அவர் விசாரித்தமையை ஏற்றுக்கொள்கின்றீர்களா? அதனை ஏற்கவில்லை எனின், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? அதற்கேற்பவே சபாநாயகரின் செயற்பாடுகளும் உள்ளன. அன்று எமது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்ட போது, அதில் என்ன இருக்கிறது என்றும் தெரியாமல் அப்போதே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டார். அப்போது அவ்வாறு செயற்பட்ட சபாநாயகர் தற்போது நாடே தீப்பற்றி எரிகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஏன் பிற்போடுகின்றார்?
அதேபோன்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உயர்நீதிமன்றத்திற்கு இருபது பக்கங்கள் கொண்ட கடிதமொன்றைச் சமர்ப்பித்திருக்கின்றார். நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் செயற்படுவதற்கு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் விசாரணைகளிலும் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் கருத்து வெளியிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலப்பகுதி குறித்து அரசியலமைப்பின் கூறப்பட்டுள்ளது. அது பற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமே உள்ளது என்றார்.