அதிகாரத்தை வழங்கினால் தீர்வு நிச்சயம்: மஹிந்த

தேசியப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு குறித்து நல்லாட்சி அரசாங்கம் கூட்டமைப்புடன் இணைந்து பல்வேறு கருத்துக்களைக் கூறிவந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. அவ்வாறான நிலையில் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்த விடயங்களை உள்ளீர்ப்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களை அதிகாரமிருக்கும் போதே பேச முடியும். அதிகாரமற்ற நிலையில் அவ்வாறான விடயங்களை வெறும் ஏடுகளில் எழுதிக் காண்பிப்பது அர்த்தமற்றதாகும். ஆகவே தமிழ் மக்கள் இந்த மாயைக்குள் சிக்காது தென்னிலங்கை மக்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் சக்தியைக் கொண்டிருக்கும் எமக்கு அதிகாரங்களை வழங்குவதன் ஊடாகவே உரிய தீர்வினை அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி: சஜித் பிரேமதாஸவிடத்திலிருந்து உங்களுடைய வேட்பாளர் எந்தவகையில் வேறுபட்டிருக்கின்றார்?
பதில்:- நாட்டுக்கு பெரும் சேவையாற்றியவரே கோத்தாபய. போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். சஜித் அவ்வாறு அல்ல. தந்தையின் பெயரைக்கூறியே மக்களிடம் வாக்குகளை கோருகின்றார்.
கேள்வி: போரை முடிவுக்கு கொண்டுவந்த உங்களால் கால அவகாசம் இருந்தும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது போயுள்ளதே?
பதில்:- போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். வீதிகள், வீடுகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் புனரமைப்பு மற்றும் மீள்நிர்மாணப்பணிகளை முன்னெடுத்திருந்தோம். மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு முழு அளவில் செயற்பட்டோம். போர் முடிவுக்கு வருவதற்கு முன்னரே கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தினை ஏற்படுத்தினோம். அதேபோன்று வடக்கிலும் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கினோம். ஆயுதங்களுடன் சரணடைந்த 13ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்தோம்.
1980களில் இருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளை படிப்படியாக விடுவித்தோம். நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு முழுமையாக நிறைவுபெற்றிருக்க வேண்டும். போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் மாத்திரமே ஆட்சியில் இருந்தோம். அந்தக்குறுகிய காலத்தில் தேசிய நல்லிணக்கத்திற்காக நாம் ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த வேளையில் தான் ஆட்சி அதிகாரம் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டது.
கேள்வி: எந்தவொரு கட்சியிலும் உறுப்புரிமையைக் கொண்டிருக்காத உங்கள் சகோதரரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- கோத்தாபய ராஜபக் ஷ கட்சியில் உறுப்புரிமையைக் கொண்டிருக்கின்றாரா இல்லையா என்பது முக்கியமான விடயமல்ல. ஆனால் எம்முடன் இருக்கும் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கேள்வி: உங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் மீது சிறுபான்மை சமூகத்தினர் எந்தளவு தூரம் நம்பிக்கை வைக்க முடியும்?
பதில்:- கோத்தாபய குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய நம்பிக்கை உள்ளது. அவர் வழங்குகின்ற உறுதிமொழிகள் நிச்சயம் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என்பதே அந்த மக்களின் மத்தியிலுள்ள அதீத நம்பிக்கையாகும்.
கேள்வி: குறிப்பாக வடக்கு, கிழக்கில் போர் வடுக்களை சுமந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் தமது வாக்குகளை கோத்தாபயவுக்கு வழங்க வேண்டும் என்று கோருவீர்கள்?
பதில்:- போர் முடிவுக்கு வந்தபின்னர் சமாதானமானதொரு சூழலை கோத்தாபயவே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பின்னர் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்கின்றார்கள். பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அச்சம்கொள்வதில்லை. இதுவொன்றே தமிழ் மக்கள் கோத்தாபயவுக்கு வாக்களிப்பதற்கு போதுமான காரணமாகும்.
நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு அதனால் எவ்விதமான பயனும் ஏற்படவில்லை. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு எம்முடன் நேர்மையாக எந்தவொரு அரசியல் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கு வேண்டிய விடயங்களை செய்து முடித்தோம். இதுவே வேறுபாடாகும். இதனை தமிழ் மக்களும் உணர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இணைந்து கூறும் போலிக்கதைகளால் எவ்விதமான பயனுமில்லை.
கேள்வி: ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை நீங்கள் பரிசீலித்தோ அல்லது கலந்துரையாடியோ பார்க்காது உடனடியாக நிராகரித்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை தனி ஈழத்தினை உருவாக்குவதற்கானதொன்றாகவே கருதுகின்றோம். அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கேள்வி: தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தால் தென்னிலங்கையில் வாக்கு வங்கி சரிந்து விடும் என்று அச்சப்படுகின்றீர்களா?
பதில்:- அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தென்னிலங்கை வாக்குகள் குறைந்துவிடும் என்று அர்த்தப்படுத்த முடியாது. தனி ஈழத்திற்கான கொள்கையையும் சிந்தனையையும் நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றமையினாலேயே 13 அம்சக் கோரிக்கைகள் பற்றிப் பேசுவதை புறக்கணித்தோம். அயல்நாடான இந்தியாவும் அந்தக் கோரிக்கைகளுக்கு எதிராகவே உள்ளது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவினை எடுத்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலமைப்புக்கான யோசனைகளை சஜித் பிரேமதாஸ தனது கொள்கைப்பிரகடனத்தில் உள்ளடக்கி உள்ளமையினாலேயே சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அவருக்கு ஆதரவளித்துள்ளார்கள். தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற கட்சியாக கூட்டமைப்பினை கருதமுடியாது. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கின்ற பணியினையே கூட்டமைப்பு செய்து வருகின்றது. எனவே தான் வடக்கு மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களைக் கண்டால் பாதணிகளை தூக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது கூட சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாறுபட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களிடத்தில் ஒருவிடயத்தினையும் சிங்கள மக்களிடத்தில் இன்னொன்றையும் முன்மொழிந்து ஏமாற்றி வாக்குகளை பெறவே முயல்கின்றார்கள். இந்த வார்த்தை ஜால விளையாட்டின் பின்னணியில் சுமந்திரனே இருக்கின்றார். இதனை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனே சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற மாயைக்குள் சிக்கக்கூடாது.
கேள்வி: சம்பந்தன் மீது மரியாதை வைத்திருப்பதாக கூறும் நீங்கள் அவருடன் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முடியாதிருப்பதற்கு என்ன காரணம்?
பதில்:- கூட்டமைப்பிடம் அவர்களது யோசனைத்திட்டங்களுடன் என்னை சந்திக்குமாறு இதயசுத்தியுடன் அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
கேள்வி: இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பாதுகாப்புக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமைக்கான காரணம் என்ன?
பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் நாட்டின் சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இதுவே ஆசியாவில் சிவிலியன்களை குறிவைத்து இடம்பெற்ற பாரிய பயங்கரவாத தாக்குதலாகும். இவ்வாறான அச்ச நிலைமையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது கடினமாகும். சுற்றுலாத்துறையும் முதலீட்டாளர்கள் வருகையும் பாதிப்படையும். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகும். எனவே தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தாது ஏனைய விடயங்களை முன்னெடுப்பது சாத்தியமற்றதாகும்.
கேள்வி: இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13பிளஸ் பற்றி பேசிய நீங்கள் அதனை இம்முறை ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்காமைக்கான காரணம் என்ன?
பதில்:- அவ்வாறான விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளீர்ப்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது. அதிகாரமிருக்கும் போதே இந்த விடயங்கள் பற்றிப்பேச முடியும். அதிகாரமற்ற நிலையில் அவ்வாறான விடயங்களை வெறும் ஏடுகளில் எழுதிக் காண்பிப்பது அர்த்தமற்றதாகும்.
கேள்வி: நீங்கள் ஆட்சி அதிகாரத்தினை ஏற்றால் தேசிய பிரச்சினைக்கான உங்களது தீர்வுத் திட்டம் என்ன? அதனை எவ்வளவு காலத்திற்குள் வழங்குவீர்கள்?
பதில்:- தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப்பகிர்வு குறித்து நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு கருத்துக்களைக் கூறிவந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. அவ்வாறிருக்க எம்மாலும் உறுதியாக கால எல்லையை வரையறுக்க முடியாது. ஆனால் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். தமிழ் மக்கள் நிரந்தரமான தீர்வினை எட்டவேண்டுமானால் எமக்கே அதிகாரத்தினை அளிக்க வேண்டும்.
கேள்வி: உங்களது ஆட்சியிலேயே போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகவும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே?
பதில்:- போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. மேற்குலக நாடுகளின் முக்கியஸ்தர்கள் ஏற்றுக்கொண்ட சர்வதேச போர் விதிகளுக்கு அமைவாகவே நாங்கள் இறுதிப்போரை முன்னெடுத்திருந்தோம். விடுதலைப் புலிகளைப் போன்று இராணுவத்தினரும் காணாமலாகியுள்ளனர். இவ்வாறான விடயங்களை கண்டறிவதற்கு பரணகம ஆணைக்குழுவை ஸ்தாபித்திருந்தோம்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த பின்னர் அனைத்தும் குழப்பியடிக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர் பற்றி அலுவலகமொன்றை ஸ்தாபித்து சாட்சிப்பதிவுகளை ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெறுப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் சரத்பொன்சேகா 2010இல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியபோது தமிழ் மக்கள் ஆதரித்திருக்க மாட்டார்கள் அல்லவா?
கேள்வி: கோத்தாபயவின் முதலாவது ஊடக சந்திப்பின்போது இறுதிக்கட்ட போர் தொடர்பில் இராணுவத்தளபதிகளே பொறுப்புக் கூறவேண்டுமென பதிலளித்ததன் ஊடாக படையினரை காட்டிக்கொடுத்துவிட்டதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளாரே?
பதில்:- அந்த ஊடக சந்திப்பில் சஜித்பிரேமதாஸ பங்கேற்கவில்லை. இறுதிக்கட்ட போர் தொடர்பான பொறுப்புக்கூறலை மற்றுமொரு தரப்புக்கு வழங்க நாங்கள் முயற்சிக்கவில்லை. முப்படைகளின் தளபதி என்ற வகையிலும், அரசியல் ரீதியாக தலைமையை வழங்கியவர் என்ற வகையிலும் முழுப் பொறுப்பினையும் நானே ஏற்கின்றேன்.
கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் குறித்து உங்களது ஆட்சியில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன?
பதில்:- ஐ.நாவுக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை இந்த அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும். அந்த பொறுப்புக்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்ற ஆட்சி முறையில் காணப்படுகின்ற முக்கிய சித்தாந்தம் யாதெனில் ஒரு பாராளுமன்றம் முன்னெடுக்கின்ற விடயமொன்றுக்கு புதிதாக உருவாக்கப்படும் பாராளுமன்றம் பொறுப்புக்கூற வேண்டியதில்லை என்பதாகும்.
கேள்வி: கோத்தாபய வெற்றிபெற்றால் நீங்கள் பிரதமராகுவீர்கள். அதன் பின்னர் நாட்டில் குடும்ப ஆட்சியே ஏற்படும் என்று விமர்சிக்கப்படுகின்றதே?
பதில்:- 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்ற வகையில் நாட்டின் நிருவாகத்தினை கோத்தாபயவும் நானும் இணைந்தே முன்னெடுக்க வேண்டியுள்ளது. வேறொருவர் தெரிவானால் சிக்கல் நிலையே ஏற்படும். குடும்ப ஆட்சியை முன்னெடுப்பதாக எம்மைச்சாடும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதியின் மருமகன். அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர். இந்நிலையில் அவர்கள் எவ்வாறு குடும்ப ஆட்சியாளர்களாக சாட முடியும். கோத்தாபய ஜனாதிபதி வேட்பாளரானதும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக் ஷ பதவியேற்றதும் எனது சகோதரர்கள் என்ற காரணத்தினால் அல்ல. போரின் பின்னர் இவர்கள் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தியமையாலேயே ஆகும்.
கேள்வி: அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சோபா, எட்சா ஒப்பந்தங்கள் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- தற்போது அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் நாம் மீளாய்வு செய்வோம். அவற்றில் வேண்டிய திருத்தங்களையும் மேற்கொள்வோம். எதிர்காலத்தில் கைச்சாத்திடவுள்ள அனைத்து ஒப்பந்தங்கள் குறித்தும் முழு அளவில் கவனம் செலுத்துவோம். பாராளுமன்ற விவாதங்களுக்குப் பின்னரே சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்போம்.
கேள்வி: ராஜபக் ஷவினரின் ஆட்சி அமைந்தால் சீனாவுடன் நெருக்கமாக செயற்படுவார்கள் என்ற விமர்சனத்திற்கு உங்களின் பதில் என்ன?
பதில்:- சீனாவுடன் மிக நெருக்கமான உறவுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று இந்தியாவுடனும் அவ்வாறானதொரு இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்பவே விரும்புகின்றோம். எங்களது நிலைப்பாடுகள் குறித்து இந்தியா தற்போது சரியான புரிதலுடன் உள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தினையும் இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை.
கேள்வி: தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உங்களுடைய அரசாங்கத்தில் எவ்வாறான வகிபாகம் இருக்கும்?
பதில்:- எமது கூட்டணியின் பங்காளிக்கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன உள்ளார். எதிர்காலத்திலும் அவர் எம்முடன் இணைந்தே செயற்படுவார்.
நேர்காணல் : ஆர்.ராம்