அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது. சற்று நேரத்தில் மற்ற வீடுகளுக்கும், தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்துக்குள்ளான கட்டடத்தில் தீத்தடுப்பு கருவிகளோ, முன்னெச்சரிக்கை அலாரமோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.